பல்லடத்தில் 13 லட்சம் பேர் பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம்
Tirupur News- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள மாதப்பூரில் வரும் 25ம் தேதி மாபெரும் பிரமாண்ட பாஜக தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் 13 லட்சம் பேர் கலந்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Tirupur News,Tirupur News Today-பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 25-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார்.
இது குறித்து பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது,
இந்தியாவின் 2-வது இரும்பு மனிதராக உள்ள அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை இதுவரை 180 தொகுதிகளில் முடிந்துள்ளது. மீதமுள்ள 54 தொகுதிகளையும், பல்லடத்தில் நடக்கும் நிறைவு விழாவுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். யாத்திரைக்கு மக்களிடத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நிறைவு விழா பிரமாண்டமாக வருகிற 25-ம்தேதி பல்லடத்தில் நடக்கிறது. கட்சியினர் 10 லட்சம் பேர், பொதுமக்கள் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்துகொள்ள இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். 400 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடைபெற உள்ளது. வாகனங்களை நிறுத்த 600 ஏக்கர் மற்றும் மக்கள் வந்து செல்வதற்காக 300 ஏக்கர் என ஆயிரத்து 300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் இந்த யாத்திரையின் நிறைவு பொதுக்கூட்டம் இருக்கும் என நினைக்கிறோம். 25-ந்தேதி பிற்பகலுக்கு மேல் நடைபெறும் பொது க்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.தேசிய தலைவர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.
பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக திருப்பூரில் வருகிற 24-ம் தேதி யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். திருப்பூர் மாநகராட்சியில் இருந்து தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை யாத்திரை நடைபெறும். பிரதமர் மோடியை பொறுத்தவரை நெருக்கமான மாநிலம், மிகவும் பிடித்த மாநிலம் தமிழகம். நேரடியாக ஆளும்கட்சியை கேள்வி கேட்கும் முதன்மை கட்சியாக பா.ஜ.க., உள்ளது. புள்ளி விபரத்துடன் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் சொல்லி இருப்பதில், 100 சதவீதம் பொய் தான். குளறுபடிகளின் ஒட்டுமொத்த அம்சமாக தி.மு.க., உள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சேவை செய்யக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியல் வருகை வரவேற்கத்தக்கது. எங்களின் சித்தாந்தாம் வேறு. இது ஒரு இயக்கம். இங்கு யாரும் நிரந்தர தலைவர் கிடையாது. லட்சியமே பிரதானம். அரசியல் நகர்வு அண்ணாமலையை நோக்கி தான் செல்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.