காதல் தகராறில் இளைஞர் அடித்து கொலை: கிரைம் செய்திகள்
திருப்பத்தூர் அருகே காதல் தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார். இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து(35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு
நேபாளத்தை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 30). இவா காவலாளியாக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் அருகே உள்ள சோலூர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் விமல் குமாரின் மகன் விஷால் (7) பட்டாசு வாங்கி தரும்படி கேட்டார். அதன்படி விமல் குமார் மகன் விஷாலை கடைக்கு அழைத்துச் சென்று பட்டாசுகளை வாங்கி கொடுத்தார். பின்னர் தந்தை மகன் 2 பேரும் வீட்டுக்கு செல்லும்போது, ஆலங்குப்பம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயில் சிறுவன் விஷால் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண்முன்னே நடந்த சம்பவத்தை பார்த்து விமல் குமார் கதறி அழுது துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை கண் முன்னே மகன் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆம்பூரில் முன் விரோதத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் மாங்காய் தோப்பை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). கம்பி கொல்லையை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (21), சந்தோஷ் (25). இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பைக்கில் வந்த அரவிந்தனை, சந்தோஷ் மற்றும் மணிகண்டன் வழி மடக்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து அரவிந்தனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அரவிந்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தனை கத்தியால் குத்திய மணிகண்டன், சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.