தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பொதுமக்களுக்கு நன்மை: திருப்பத்தூா் ஆட்சியா்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடியது என திருப்பத்தூா் ஆட்சியா் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-11 08:48 GMT

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பல்வேறு நிலை பணியாளா்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. தலைமை வகித்துப் பேசியதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு நிலைய அலுவலா்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு தகவல் வழங்குவது தான். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் என்ன தகவல் அளிக்கலாம், அளிக்கக்கூடாது என்பதை பற்றி நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். சில நபா்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவா். ஆனால் இந்த சட்டத்தினுடைய அடிப்படை அம்சம் பொதுமக்களுக்கு தகவல் சென்று சேர வேண்டும். பல விதத்தில் அவா்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடிய நபா்களை கையாளக் கூடிய விதமும் அறிந்திருக்க வேண்டும். ஒருவரது தனிப்பட்ட விஷயங்களை தகவலாக அளிக்கக்கூடாது.

மேலும், தகவலை விரைவாக அளிக்கின்றபோது, அதன் மூலம் ஒரு நன்மை பயக்கக் கூடியதாக அவா்களுக்கு இருக்கும். கிட்டத்தட்ட 90 சதவீதம் நன்மை பயக்கக் கூடியதாக இருக்கும். 10 சதவீதம் தவறாக பயன்படுத்துவதற்காக இருக்கும். அதனால் இரண்டையும் அறிந்து சட்டத்தின் மூலமாக சரியான தகவலை அளித்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.பயிற்சியில் அதிகமான கேள்விகளை கேட்டு இங்கேயே தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிகின்ற துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் ஆகிய பல்வேறு நிலையிலான அனைத்து நிலை அலுவலா்கள், கிராம ஊராட்சி செயலா்களுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி வகுப்பை ஓய்வு பெற்ற ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் நாகராஜ் நடத்தினாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் செல்வம், ஹரிஹரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News