தேசிய நெடுஞ்சாலையில் காவலர் பூஜை வைரல்: மாவட்ட காவல் துறை மறுப்பு
தேசிய நெடுஞ்சாலையில் காவலர் பூஜை என வைரலான செய்திக்கு மாவட்ட காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.;
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 13-12-2023 அன்று காவலர் விபத்தை குறைக்கும் வகையில் சாலையில் பூஜை செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியில், ஆம்பூரில் ராஜீவ்காந்தி கூட்டு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் காவலர் ஒருவர் விபத்தை குறைக்கும் வகையில் பூஜை செய்ததாக செய்தி வெளியானது.
காவலர் என குறிப்பிடும் நபர் திரு.ஜான் ஜோசப் (42), இவர் காவல்துறையைச் சேர்ந்தவர் இல்லை எனவும் L&T நிறுவனம் மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த நான்கு மாதங்களாக அங்கு அவர் வேலை செய்து வருகிறார் என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். எனவே சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது இத்தகைய செய்திகளை பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.
பள்ளி வாகனத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே சிம்மனபுதூா் பகுதியைச் சோ்ந்த ராஜசேகரனின் மகன் பிரித்திவி (3). விஷமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாா். இந்த நிலையில், வழக்கம்போல் பள்ளி வாகனம் பிருதிவியை அழைத்துச் செல்ல வீட்டின் அருகில் வந்துள்ளது. அப்போது பிரித்திவியின் தந்தை ராஜசேகரன் பள்ளி வாகனத்தில் குழந்தையை ஏற்றிவிட்டு சென்றுள்ளாா். அப்போது பள்ளி வாகனத்தின் ஓட்டுநா் வாகனத்தை இயக்க முற்பட்டபோது எதிா்பாராதவிதமாக ராஜசேகரின் இரண்டாவது மகன் புனிதன் (ஒன்றரை வயது) பள்ளி வேனின் பின் சக்கரத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து பள்ளி வாகன ஓட்டுநா் முனியப்பனை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு ரூ.20 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்
வேலூா் மாவட்டம், திருவலம் துணை மின்நிலையம் பவா் கிரிட் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சாா்பில், திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிஎஸ்ஆா் நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் பல் மருத்துவ நாற்காலி, உறிஞ்சும் கருவிகள், காது,மூக்கு தொண்டை நுண்ணறுவை சிகிச்சை கருவி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஒப்படைத்தாா். அப்போது, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சாரா செலின் பால், மருத்துவ அலுவலா் சிவக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
போலி ஆவணம் தயாரித்து மோசடி: மின்வாரிய பெண் அதிகாரி கணவருடன் கைது
திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைசெல்வராஜ் (60). இவரது மனைவி மனகாந்தி (50). இவர் பேராம்பட்டு மின்வாரிய மேற்பார்வை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். தம்பதிக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலம் இருந்தது. இதனை துரைசெல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மநாபன், சக்திவேல், சரவணன், ஏழுமலை, டாக்டர் சிவக்குமார் ஆகியோருக்கு தனித்தனியாக பிரித்து விற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 8-9-2021ம் ஆண்டு துரைசெல்வராஜ் மற்றும் அவரது மனைவி மனகாந்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து தங்களது மகள் அன்புச்செல்விக்கு போலி ஆவணம் மூலம் ஏற்கனவே தாங்கள் விற்ற 21 ஏக்கர் நிலத்தை செட்டில்மென்ட் செய்ததாக தெரிகிறது. இதற்காக போலி பட்டா, பத்திரம், வில்லங்க சான்று ஆகியவற்றை தயாரித்து பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட்ஜானிடம் சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பத்மநாபன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே விற்ற சொத்துக்களை துரைசெல்வராஜ், அவரது மனைவி மனகாந்தி ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் மகள் அன்புச்செல்விக்கு போலி ஆவணங்கள் மூலம் தானசெட்டில்மென்ட் செய்து மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தம்பதி இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே போலியான ஆவணங்களை சரிவர பார்க்காமல் பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் சேகர், பத்திரப்பதிவு செய்ய அறிவுறுத்திய மாவட்ட பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது கைதான துரைசெல்வராஜ், ஏற்கனவே சொத்து பிரச்னை காரணமாக தனது தந்தையை கொன்ற வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.