ஏலகிரி கோடை விழா: ஆட்சியர் ஆலோசனை கூட்டம்
ஏலகிரி கோடை விழா நிகழ்ச்சி இம்மாதம் இறுதி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (சனி,ஞாயிறு) இரு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
ஏலகிரி மலைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் கோடை விழா நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா மற்றும் கோடை விழா அரங்கம் கட்டுதல் உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக ஏலகிரி மலையில் கோடை விழா நடத்தவில்லை.
இந்த ஆண்டு கோடை விழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில், ஏலகிரி மலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோடை விழாக்கள் தொடர்ந்து 2 நாட்கள் சிறப்பாக நடத்த வேண்டும். விழா கலையரங்கம் முன்பும், ஏலகிரி மலை அடிவாரத்திலும் அலங்கார வளைவு அமைக்க வேண்டும்.
இயற்கை பூங்காவில் (நேச்சுரல் பார்க்) தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறிகளைக் கொண்டு விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட உருவம் அமைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏலகிரி மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்.
போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மலை அடிவாரத்தில் காரை நிறுத்திவிட்டு பேருந்தில் மலைக்கு வந்தால் அவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். கார் நிறுத்துவதற்காக மலை அடி வாரத்திலும் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.
கலை நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்த வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு பைக்கில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை சாலை ஓரங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஏலகிரி மலை வனப்பகு தியில் தற்போது கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. குறிப்பாக சுவாமி மலை அருகே அதிக அளவில் கரடிகள் உள்ள தால், வனத்துறை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதை தடுக்க வேண்டும்.
சனி மற்றும் ஞாயிறு 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், அதற்கேற்றவாறு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பிறகு ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு அரசு பேருந்து தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது.
குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை கவரும் விதமாக கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும்.குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கோடை விழா நிகழ்ச்சி இம்மாதம் இறுதி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (சனி,ஞாயிறு) இரு நாட்கள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இன்னும் உறுதி செய்யவில்லை. மற்றொரு ஆலோசனை கூட்டம் ஏலகிரி மலையில் விரைவில் நடத்தப்படும். அதில் கோடை விழா நடத்தும் தேதி குறிப்பிடப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர் மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வ ராசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், ஹரிகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.