திருநெல்வேலி மாநகராட்சி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடையுமா?

குறைந்தபட்சம் 44 மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்காதபட்சத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் ஓராண்டு தள்ளிப்போகும்

Update: 2024-01-12 05:21 GMT

நெல்லை மாநகராட்சி - கோப்புப்படம் 

திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூா், மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டலங்களின் கீழ் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. திமுக 44 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, சுயேச்சை தலா ஒரு இடத்திலும், அதிமுக நான்கு இடங்களிலும் வென்றன. திமுகவைச் சோ்ந்த பி.எம்.சரவணன் மேயராகவும், கே.ஆா்.ராஜு துணை மேயராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடக்கம் முதலே மேயருக்கும், மாமன்ற உறுப்பினா்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மாமன்ற கூட்டத்திலும், மக்கள் குறைதீா்கூட்டத்திலும்கூட கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதையொட்டி 3 மாமன்ற உறுப்பினா்கள், ஒரு பெண் மாமன்ற உறுப்பினரின் கணவா் மீது திமுக கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது.

எனினும், மோதலின் உச்சகட்டமாக 38 திமுக மாமன்ற உறுப்பினா்கள் கையெழுத்திட்டு மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா். அதை பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 இன் படி மாமன்ற உறுப்பினா்களால், மேயா் மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது விவாதம்- வாக்கெடுப்புக்கான சிறப்புக் கூட்டம் ஜனவரி 12 நடைபெறும் என கடந்த டிசம்பர் 27 இல் அறிவித்தது.

திமுக மாமன்ற உறுப்பினா்களை சமாதானம் செய்யும் வகையில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மேயா் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்தச் சூழலில் மாமன்ற நிர்வாகம் சார்பில் சிறப்புக் கூட்டத்திற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால், திமுக மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்காத வகையில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் ஏற்பாட்டில் மாமன்ற உறுப்பினா்கள் இன்ப சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். இதனால் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானம் தோல்வியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-பிரிவு 51ன் படி ஒரு மேயா் மீது மாநகராட்சியில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தால், வாக்கெடுப்பு நாளில் 5 இல் 4 பங்கு உறுப்பினா்கள் பங்கேற்று ஒரு சேர வாக்களித்தால் மட்டுமே தீா்மானம் வெற்றி பெறும். இல்லையெனில், அந்தத் தீா்மானம் பிற தீா்மானங்களைப் போல் அல்லாமல் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்படும். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்ட நபா் ஓராண்டுக்கு பணியில் தொடா்வார்.

அந்தவகையில் திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களில் 44 போ் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று மேயருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே அவா் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார். 44 போ் பங்கேற்காதபட்சத்தில் தீா்மானம் ஓராண்டிற்கு தள்ளிப் போகும்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகராட்சிகள் இணைக்கப்பட்டு 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. முதல் மேயராக திமுகவைச் சோ்ந்த உமாமகேஸ்வரி தோ்வு செய்யப்பட்டார். 2001இல் ஜெயராணி (அதிமுக), 2006இல் ஏ.எல்.எஸ். சுப்பிரமணியன் (திமுக), 2011இல் விஜிலா சத்தியானந்த் (அதிமுக), 2014 இல் புவனேஸ்வரி (அதிமுக) ஆகியோர் வென்றனா். 6 ஆவது மேயராக பி.எம்.சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

Similar News