நெல்லையில் 73 வயதில் டாக்டர் பட்டம் வாங்கிய முதியவர் நெகிழ்ச்சி
நெல்லை மனோன்மணியம் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் 73 வயதில் டாக்டர் பட்டம் வாங்கிய முதியவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது. இளைய தலைமுறையினர் காந்தி வழியில் அகிம்சை அன்பை பின்பற்றி பயங்கரவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும்; நெல்லையில் 73 வயதில் டாக்டர் பட்டம் வாங்கிய முதியவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் தங்கப்பன் (73), அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் ஏற்கனவே தனது இளமை பருவத்தில் எம்.ஏ., வரலாறு மற்றும் பி.எட், ஆகிய படிப்புகளை முடித்துள்ள நிலையில், உயர் கல்வியின் மீதும் காந்திய கொள்கைகள் மீதும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பிஎச்டி படிப்பை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு காந்திய தத்துவம் எவ்வாறு பொருத்தமானது என்ற தலைப்பில் எட்டு ஆண்டுகளாக முதியவர் தங்கப்பன் பல்வேறு ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பிஎச்டி படிப்பை முடித்துள்ளார். இருப்பினும் கொரோனா காரணமாக தங்கப்பனுக்கு பிஎச்டி பட்டம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில் நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது தங்கப்பன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையால் தனது பிஎச்டி பட்டத்தை பெற்றுக் கொண்டார். தற்போது தங்கப்பனுக்கு 73 வயது ஆகிறது. இதுபோன்று 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பட்டம் வாங்குவது வழக்கமான விஷயம் தான் என்றாலும் கூட நாட்டின் தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல் பயங்கரவாதம் குறித்தும், அதில் காந்தி தத்துவத்தின் பயன்பாடு குறித்த தலைப்பில் முதியவர் தங்கப்பன் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியதே.
இதுகுறித்து தங்கப்பன் கூறுகையில், நான் வெறும் பட்டத்துக்காக படிக்கவில்லை. காந்தியின் கொள்கை என்னை மிகவும் கவர்ந்தது. வரும் தலைமுறையினரும் காந்தி கொள்கையை பின்பற்றி அகிம்சை அன்பு வழியில் பயங்கரவாதம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.