நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது;
தென் இலங்கை கடற்கரையையொட்டிய வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஞாயிற்றுக்கிழமை டிச.17 தென் தமிழகத்தின் பல இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. மேலும் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
குளங்கள் மற்றும் ஏரிகளும் நிரம்பி வருகின்றன. பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் தற்போது 133 அடியாக உள்ளது. அணை முழுவதுமாக நிரம்ப இன்னும் 10 அடி மட்டுமே தேவை.
அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில் மாலை 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தாமிரபரணி கரையோரங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சனிக்கிழமை இரவு முதலே திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்தது.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ச்சியாக கன மழை பெய்து வருவதால் திருச்செந்தூரில் தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது, இதனால் பொதுமக்களும், பக்தா்களும் மிகுந்த அவதியடைந்தனா்.சாலைகளில் மழைநீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் கனமழையால் குளங்களில் நீா் வரத்து அதிகரித்ததால் திருச்செந்தூா் தெப்பக்குளம் முழுவதும் நிரம்பியது. திருச்செந்தூரில் 48 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை சஷ்டி என்பதால் அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனா். ஐயப்ப பக்தா்கள் கொட்டும் மழையிலும் சுவாமியை வழிபட்டனா்.