திசையன்விளை - சூறைக்காற்றால் பல லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் சாய்ந்தது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் அடித்த சூறைக்காற்றால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன.

Update: 2021-05-26 15:56 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில்  அடித்த சூறைக்காற்றால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன.

யாஸ் புயல் எதிரொலியால்  நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுப்பகுதிகளில் பல இடங்களில்பயங்கர சத்தத்துடன் ,சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன.மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால்  திசையன்விளை முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடங்கல் ஏற்பட்டது.

திசையன்விளை அருகே உள்ள வாழைத் தோட்டம் என்னும் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த குலை தள்ளிய 20 000 வாழை மரங்களில் 10,000 வாழைமரங்கள் சூறைக்காற்றில் நிலைகுலைந்து சாய்ந்தன. நிலை குலைந்து சாய்ந்த வாழை மரத்தைக் கண்ட விவசாயிகள் பெற்ற குழந்தை மடிந்தது போல் இருந்ததாக தங்களது வேதனையை பேச முடியாமல் விம்மலுடன் தெரிவித்தனர்.

கடந்த வருடம் கொரோனாவின் தாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வாழைத்தார் ஒன்றுக்கு ஆறு ரூபாய் நிவாரணத் தொகையாக அரசு அளித்தது. ஐந்து ரூபாய்க்கு ஒரு பழம் கூட வாங்க முடியாத நிலையில் ஒரு வாழைத்தார் பயிரிடுவதற்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலவாகும் நிலையில் வாழைத்தாருக்கு ஆறு ரூபாய் நிவாரணம் போதுமா ? என்ற கேள்வியையும் எழுப்பினர். கொரோனா தாக்கத்தோடு இயற்கையின் சீற்றமும் சேர்ந்து தங்கள் வாழ்வை சீரழிக்கும் நிலையில் அரசுதான் தங்களுக்கு கைகொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News