உடலுக்கு நலம், மனதிற்கு அமைதி தரும் செல்ல பிராணிகள் வளர்ப்பு

வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளால் உடலுக்கு நலமும் மனதிற்கு அமைதியும் கிடைக்கிறது

Update: 2022-10-03 14:23 GMT

வளர்ப்பு நாய்கள், பூனைகள்.

ஏய்...ஜானி, பிளாக்கி, பிரவுனி, ஏஞ்சல், டைகர், டீனு, மீனா, மீனாட்சி என்று பல வீடுகளில் செல்லப்பிராணிகளை அழைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். நாய், பூனை, கிளி என்று செல்லப்பிராணிகளை தான் வீடுகளில் குழந்தைகளை அழைப்பதுபோல் கொஞ்சி அழைக்கிறார்கள். அதுவும் நடிகர், நடிகைகள் மற்றும் பணக்காரர்கள் வீட்டு செல்லப் பிராணிகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவைகளுக்கு அந்த வீடுகள் சொர்க்கம்தான். அந்த செல்ல பிராணிகள் கடவுளிடம் வரம் வாங்கி வந்தவர்கள் என்று சொல்லலாம்.  

செல்லப்பிராணிகள் வளர்ப்பு என்பது பொழுதுபோக்கு மட்டும் என்று நாம் நினைத்து விடக்கூடாது. செல்லப்பிராணிகளை வளர்ப்பது மனநல சிகிச்சைக்கு உகந்தது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். வீடுகளில் முறையாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் மட்டுமே மனிதர்களின் மன நலத்துக்கும், உடல்நலத்துக்கும் பயனளிக்கின்றன. 

செல்லப்பிராணிகளை நாம் குழந்தைகள் போல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவைகளுக்கு உரிய உணவு, மருத்துவ சிகிச்சைகளை தவறாமல் அளிக்கவேண்டும் . செல்லப்பிராணிகளுடன் நாம் அதிக நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் அவைகளின் மனநிலையும் நன்றாக இருக்கும். வீடுகளில் பிராணிகள் வளர்ப்பு என்பது கொரனா  காலத்தில் அதிகரித்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதுவும் பொது முடக்கம் பல நாட்கள் நீடித்த போது பலர் மன அழுத்தம் சார்ந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த காலகட்டத்தில் வீடுகளில்  வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள் தான் மனிதர்களின் மனஅழுத்தத்தை குறைத்து  மனநலம் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க உதவின.  செல்லப்பிராணிகளால் மன அழுத்தம் தடுக்கப்படுவதாகவும், நரம்பியல் தொடர்பான நோய் வருவது குறைவதாகவும் ஆய்வு கூறுகிறது.

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் என்றதும் நாய் மட்டுமே என்று பலர் நினைக்கிறார்கள். முயல்,  பூனைகள், லவ் பேர்ட்ஸ் என்று பல வளர்ப்பு பிராணிகள் உள்ளன. வெளிநாடுகளில் முதலை, பாம்புகளைகூட வீடுகளில் வளர்க்கிறார்கள். வீடுகளில் கண்ணாடி தொட்டிகளில் வளர்க்கப்படும் வண்ண மீன்கள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மன அமைதி தருவதாக ஆய்வு கூறுகிறது. பல முதியவர்களுக்கு வீடுகளில் துணையாக இருப்பது நாய்கள் தான்.

இந்தியாவில் வளர்ப்பு நாய்களை ரோட்டிலும், வீட்டு திண்ணையிலும் போட்டு வளர்க்கிறார்கள்.  ஆனால் வெளிநாடுகளில் நாய்களை சொந்தப் பிள்ளைகள் போல் வளர்ப்பதோடு சிலர் தங்கள் சொத்தை நாய்களுக்கு எழுதி வைக்கிறார்கள். இந்த கலாசாரம் இந்தியாவிலும் வளர்ந்துகொண்டிருக்கிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து வெளிநாடுகளில் இருந்து நாய்களை விமானத்தில் கூட கொண்டுவருகிறார்கள். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் பில்லி சூனியம், செய்வினை, தீயசக்தியை கண்டறிந்து குடும்பத்தினரை பாதிக்காத அளவுக்கு தடுத்து நிறுத்தும் சக்தி படைத்தவைகள்  என்று நம்பப்படுகிறது.   இரவு நேரத்தில் நாய்கள் தொடர்ந்து குரைத்தால் ஏதோ தீய சக்தி நாய்களுக்கு மட்டும் தெரிகிறது என்று கிராமத்துப் பெரியவர்கள் கூறுவார்கள்.

சில நேரங்களில் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் ஆரோக்கியமாக இருந்தாலும் திடீரென்று இறந்து விடும். அப்போது குடும்பத்தினருக்கு ஏற்பட இருந்த தீங்கை இந்தப் பிராணிகள் ஏற்றுக்கொண்டு இறந்து விட்டதாக கூறுவார்கள். சில நேரங்களில் வீட்டுக்குள் நுழையும் பாம்புகளை வளர்ப்பு நாய் கண்டு பிடித்து கடித்து கொன்று விடும். பாம்பு கடித்து நாய்கள் உயிர் தியாகம் செய்த சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன. நாய்களில் பல வகை உண்டு.  ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனி குணமுண்டு. இனத்தைப் பொறுத்து குணம் மாறுபடும். பொதுவாக ஆறு வாரங்கள் தாய் நாயுடன் இருந்த குட்டிகளை வாங்கி வளர்ப்பது நல்லது.

செல்ல பிராணிகளால் வீட்டில் உள்ளவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.செல்லப்பிராணிகளுக்கு கண்டிப்பாக நோய் தடுப்பு  ஊசிகள் போடுவது முக்கியம்.  அதிகமாக முடி உள்ள பூனை, நாய் போன்ற பிராணிகளிடம்  இருந்து உதிரும் முடிகளால் மனிதர்களுக்கு அலர்ஜி, ஆஸ்துமா பிரச்சனை ஏற்படும். தோல் அரிப்பு மற்றும் மூச்சு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். எது எப்படி இருந்தாலும் வளர்ப்புப் பிராணிகள் உள்ள வீட்டில் எப்போதும் ஒரு மகிழ்ச்சி இருந்துகொண்டே இருக்கும் என்பது உண்மைதான்.

Tags:    

Similar News