வள்ளியூரில் உலக அமைதிக்காக சைக்கிள் பயணம்: போலீசார், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
வள்ளியூரில் சைக்கிள் மனிதருக்கு காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீது பாராட்டி வரவேற்பு.
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் உலக அமைதிக்காக சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சமூக ஆர்வலருக்கு காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக அமைதிக்காக பறவைகள், மிருகங்கள் இவற்றை வேட்டையாடுவதும், நீர்வளத்தை சேமித்து பாதுகாக்கவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹரியானாவில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி தேசிய அளவிலான லயன்ஸ் கிளப் உறுப்பினர் சிர்ஷா ஆஸ்தாவை சேர்ந்த சுபாஷ் (வயது 60) தனது சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தார்.
அங்கிருந்து 5 மாதம் ஹரியானா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார், நேபால், வெஸ்ட் பெங்கால், ஒரிசா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக தமிழ்நாடு வந்தடைந்தார்.
பின்னர் கேரளா செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர் ஜான்சன், வள்ளியூர் வணிகர் நலச்சங்க தலைவர் எட்வின் ஜோஸ், செயலாளர் கவின் வேந்தன் மற்றும் வள்ளியூர் லயன்ஸ் கிளப் தலைவர் ஜோசப் ஜீன்ராஜா, செயலாளர் ராஜவேலு, பொருளாளர் மரிய ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் தேவ அந்தோணி அமலன், ஜெகதீசன் மற்றும் ஜான் வின்சென்ட் ஆகியோர் அவருக்கு வரவேற்பு கொடுத்து பாராட்டினர்.
இதனைத்தொடர்ந்து அவர் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேஷ் வழியாக சண்டிகார் செல்ல உள்ளார்.