கூட்டப்புளி கடற்கரையில் கரை ஒதுங்கிய 1 டன் எடையுள்ள கடல் பசு
கூட்டப்புளி கடற்கரையில் கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. வனத்துறை அதிகாரிகள் அதனை மீட்டு அடக்கம் செய்தனர்.
கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்புளி கடற்கரையில் 1 டன் எடையுள்ள கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. வனத்துறையினர் உடலை மீட்டு விசாரணை.
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே உள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில் 1 டன் எடையுடைய கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதை கண்ட மீனவர்கள் இதுகுறித்து கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் டிராக்டர் உதவியுடன் கயிறு கட்டி கரைக்கு மேலே கொண்டு வந்து பார்வையிட்டனர்.
அதில் கடல் பசுவின் முகத்தில் காயத்திற்கான அடையாளம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. தாவரங்களை மட்டுமே தின்று வாழும் பாலுட்டி இனம் தான் இந்த கடல் பசு. கடல் பசுக்கள் அலைகளற்ற அமைதியான கடலில் வாழ்வதாலும், அடிக்கடி கரையோரம் வருவதாலும், இதனால் வேட்டையாட படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளியில் அலையின் சீற்றம் அதிக அளவில் இருக்கும் ஆகவே இந்த கடல்பசு வேறு பகுதியில் இருந்து அடிபட்டு இறந்து இந்த கடல் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.