யுடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்
யூடியூபர் மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று மீண்டும் கைது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்.
யுடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டு நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்தாண்டு தொடரப்பட்ட வழக்கில் போலீசார் திடீர் நடவடிக்கை.
பாஜக கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசி வரும் யுடியூபர் மாரிதாஸ் தமிழக அரசு குறித்து அவதூறு பேசியது உள்பட 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் அவதூறு வழக்கை மட்டும் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இருப்பினும் மற்றொரு வழக்கில் மாரிதாஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஆண்டு மீரான் என்பவர் மாரிதாஸ் மீது அளித்த புகாரில் நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் போலீசார் திடீர் நடவடிக்கையாக இன்று மாரிதாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தேனியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் மாவட்ட நீதின்றம் ஜேஎம்-5ல் நீதிபதி விஜயலட்சுமி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி தொடர்ந்து 30. 12.2021 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி உத்தரவை தொடர்ந்து மாரிதாஸ் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் தேனி அழைத்து செல்லப்பட இருக்கிறார். முன்னதாக மாரிதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.