வேட்புமனு தாக்கல் செய்தவுடன் வெற்றி கொண்டாட்டம்: ஆதரவாளர்கள் அமர்க்களத்தால் பரபரப்பு
பாளையங்கோட்டையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளருக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.;
வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வந்த உடனேயே வெற்றியை தீர்மானித்த ஆதரவாளர்கள். பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தால் பரபரப்பு.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், மானூர் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 15ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்பட மொத்தமுள்ள 237 பதவிகளுக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இதுவரை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 52 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 114 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 30 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 62 பேரும், போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இந்த சூழ்நிலையில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செங்குளம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள தேவதாசன் என்பவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் தேவதாசனுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து நீங்கள் தான் தலைவர் என்று கூறி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து வேட்புமனு பரிசீலனை, தேர்தல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகே வெற்றி நிலவரம் தெரியவரும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த உடனேயே வேட்பாளரின் ஆதரவாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.