வ உ சிதம்பரனார் ஓவியம் வரைந்து சாதனை: மாணவர்களுக்கு பரிசளிப்பு
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களுக்கு பரிசு மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
நெல்லை பாளையங்கோட்டையில் வ .உ. சிதம்பரனார் ஓவியம் வரைந்த சாதனை மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் வ. உ. சி. இலக்கிய மன்ற தலைவர் புளியரை ராஜா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நெல்லை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த இரு பெரும் விழாவுக்கு அரசு அருங்காட்சியக காப்பாளர் சத்தியவள்ளி தலைமை வகித்தார். அகில இந்திய வானொலி சந்திரபுஷ்பம்பிரபு தமிழ் தாய் வாழ்த்து பாடினார். வ உ சி இலக்கிய மாமன்ற துணைச் செயலாளர் முத்துசாமி வரவேற்றார்.
எழுத்தாளர் நாறும்பூநாதன் துவக்க உரையாற்றினார். இதைத்தொடர்ந்து வானவில்லை பார்க்கிறேன் என்ற தலைப்பில் புளியரை ராஜா எழுதிய நூலை, நெல்லை கோட்டாட்சியர் சந்திரசேகர் வெளியிட்டார். இதைப்போல் என் நெஞ்சம் மறவா நஞ்சைக்காடு என்ற தலைப்பிலான நூலை ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான சுப்பிரமணியன் வெளியிட்டார். முதல் பிரதிகளை டாக்டர் அருணாச்சலம், பேராசிரியர் சுவர்ணலதா பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே, தேசிய தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி, கலைநயத்துடன் அவரது படத்தை ஓவியமாக வறைந்த இந்துஜா செல்வி, மதனா, தீக்ஷனா ஆகிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர் கணபதி சுப்ரமணியன், காந்தி பேராசிரியர். கதிர்வேல் ஆறுமுகம், நசீர் உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.