நெல்லை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தாெற்று சிகிச்சைக்கு தனி வார்டு
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தாெற்று சிகிச்சைக்கு 100 படுக்கைகள் வசதியுடன் கூடிய வார்டு தயார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் வார்டு தயார். வெண்டிலேட்டர்/ ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தினமும் 32 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயார் செய்யப்பட கூடிய வசதி இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என தகவல்.
உலகம் முழுவதும் ஒமைகிரான் வைரஸ் பரவத் துவங்கியுள்ளது. 3வது நாடாக இந்தியாவிலும் ஒமைக்கிரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த பயணி ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு இல்லை என கூறப்பட்டாலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 1500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 49 ஆயிரத்து 665 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 49 ஆயிரத்து 141 பேர் தொற்று நீங்கி குணமாகி வீடு திரும்பி சென்றனர். 433 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 91 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக பரவி வரும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கும் விதமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் இந்த படுக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் என்பதை கடந்து எந்த வகையிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தற்போது வரை தெரியா விட்டாலும் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் தயாராக உள்ளது.
வைரஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2வது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. தற்போது நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே நாளொன்றுக்கு 32 ஆயிரம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகுகள் உள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு உச்சகட்டத்திற்கு சென்று ஆக்சிஜன் தேவை அதிகரித்தாலும் தட்டுப்பாடு ஏற்படாது. தேவைகேற்ப தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்க முடியும் என தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.