நெல்லையில் அனுமதி பெறாமல் கட்டிய தனியார் மருத்துவமனைக்கு சீல்: நோயாளிகள் பரிதவிப்பு
நெல்லையில் அனுமதி பெறாமல் அரசுக்கு அல்வா கொடுத்து வந்த தனியார் மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
நெல்லையில் அனுமதி பெறாமல் அரசுக்கு அல்வா கொடுத்து வந்த தனியார் மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டது. பணிபுரிந்தவர்கள் மருத்துவமனையை விட்டு பிரிய முடியாமல் கதறி அழுத ஊழியர்கள்.
நெல்லை பெருமாள்புரத்தில் வினோத்குமார் பிலிப் என்பவருக்கு சொந்தமாக இயங்கி வந்த வி ஜே மருத்துவமனை கட்டடம் அரசிடம் அனுமதி வாங்காமல் கட்டப்பட்டிருப்பதாகவும், வணிக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற்று விட்டு விதிமீறி மருத்துவமனை கட்டிடம் கட்டியுள்ளதாகவும், நெல்லையை சேர்ந்த பெர்டின்ராயன் என்பவர் தொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட வி ஜே மருத்துவமனை கட்டிடத்தை பூட்டி சீல் வைப்பதுடன் கட்டிடத்தை இடிக்கும்படி மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
எனவே 48 மணி நேரத்துக்குள் மருத்துவமனையை காலி செய்யும்படி நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால் மருத்துவமனையை காலி செய்ய நிர்வாகம் முன்வராததால் இன்று மாநகராட்சி நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வி ஜே மருத்துவமனையை சீல் வைக்க அங்கு சென்றனர். அப்போது போதிய கால அவகாசம் வழங்கும்படி மருத்துமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நீதிமன்ற உத்தரவு என்பதால் உடனே சீல் வைக்க வேண்டும் என அலுவலர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
பின்னர் மேலப்பாளையம் மண்டல துணை ஆணையர்( பொறுப்பு) லெனின் மேற்பார்வையில் மருத்துவமனை வளாகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கட்டிடம் எந்த நேரமும் இடிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக முக்கிய மருத்துவ கருவிகளை மட்டும் ஊழியர்கள் வெளியே எடுத்து சென்றனர். முன்னெச்சரிக்கையாக பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் பார்த்தீபன் தலைமையில் மருத்துவமனை முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில் வழக்கம் போல் பணிக்கு வந்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மருதுவனை சீல் வைக்கப்படுவதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களுக்கு வாழ்வழித்த மருத்துவமனைக்கு ஏற்பட்ட இந்த நிலையை தாங்க முடியாமலும் பணிபுரிந்த மருத்துவமனையை விட்டு பிரிய முடியாமலும் சில பெண் செவிலியர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் திடீரென மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டதால் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் பெரும் சிரமப்பட்டனர். பிறகு அவர்களை உறவினர்கள் வேறு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். மக்களின் உயிரை காக்கும் மருத்துவர்கள் இதுபோன்று அரசை ஏமாற்றி கட்டிடம் கட்டியிருப்பதும், அதை உடனே கவனிக்காமல் சட்டப்போராட்டத்துக்கு பிறகே நடவடக்கை எடுத்த அதிகாரிகளின் செயலும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.