நெல்லையில் அனைத்து தாெழிற்சங்கம் சார்பில் சாலை மறியல்: 600 பேர் கைது
வண்ணார்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த சாலை மறியல் போராட்டம். 600 பேர் கைது.
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. 234 பெண்கள் உள்பட 600 பேர் கைது.
பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை 44% பஸ்கள் இயங்குவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகில் அனைத்து தொழிற்சங்கள் மற்றும் விவசாய சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி தமிழ்நாடு விவிசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் செல்லும் சாலையின் நடுவே அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் மறியலில் ஈடுபட்ட 234 பெண்கள் உள்பட 600 பேரை கைது செய்து வண்டியில் அழைத்து சென்றனர். மறியல் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில்,
மத்திய அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அதை கண்டித்து இரண்டு நாள் நடைபெறும் இந்த வேலை நிறுத்தம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், வள்ளியூர், நாங்குநேரி, வீரவநல்லூர், முக்கூடல் உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.