வாகனங்களில் விதிமீறி பொருத்தப்பட்ட பம்பர்கள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் அதிரடி

பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் நான்கு சக்கர வாகனங்களை மடக்கி பம்பரை அகற்றினர்.

Update: 2021-10-26 11:40 GMT

பாளையங்கோட்டையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் நான்கு சக்கர வாகனங்களை மடக்கி பம்பரை அகற்றினர்.

நெல்லையில் போக்குவரத்து போலீசார் நடத்திய திடீர் சோதனையில் நான்கு சக்கர வாகனங்களில் விதிமீறி பொருத்தப்பட்ட பம்பர்கள் அகற்றம். வாகன உரிமையாளர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

நான்கு சக்கர வாகனங்களின் முன்பகுதியில் பம்பர் பொருத்தப்பட்டிருப்பதால் விபத்து நேரத்தில் ஏர்பேக் ஓப்பன் ஆக முடியாத நிலை ஏற்படுவதாலும், எதிர் திசையில் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பலத்த சேதம் ஏற்படும் என்பதாலும் பம்பர் பொருத்த மத்திய அரசு கடந்த ஆண்டு அதிரடியாக தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகளும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்த சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று போக்குவரத்து போலீசார் நான்கு சக்கர வாகனங்களில் விதிமீறி பம்பர் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினர்.

நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்த சோதனையில் பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் பம்பருடன் வலம் வந்த நான்கு சக்கர வாகனங்களை மடக்கிப்பிடித்தனர். பின்னர் கையோடு மெக்கானிக்குகளை வரவழைத்து சம்பவ இடத்தில் வைத்தே பம்பரை கழட்டி வாகனத்தின் உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் விதிமீறி பம்பர் பொருத்தப்பட்ட காரணத்துக்காக வாகன உரிமையாளர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லை மாநகரில் இதுபோன்று விதிமீறி பம்பர் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பாக தொடர் சோதனை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இன்று நடைபெற்ற சோதனையில் மட்டும் இதுவரை 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் அகற்றப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அரசு உத்தரவு என்பது அனைத்து பொது மக்களுக்கும் பொருந்தும் என்றாலும் கூட அரசு அதிகாரிகள் மற்றும் அரசு வாகனங்கள் பலவற்றிலும் இது போன்று விதிமீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அவற்றைக் கண்டு கொள்ளாமல் அப்பாவி பொது மக்களை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதிப்பது சமூக ஆர்வலர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News