நெல்லையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி: ஆட்சியர் பங்கேற்பு
தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் ஏற்கப்பட்டது.;
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் இன்று (29.01.2022) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30ஆம் நாள் இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலங்களில் அலுவலகப் பணியாளர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழியும் எடுப்பது வழக்கமாகும்.
இந்நிலையில், 30.01.2022 அன்று விடுமுறை தினமாக இருப்பதால், 29.01.2022 இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டு இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அனைத்துப் பணியாளர்களும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/ குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என்று தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு வாசிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலஎடுப்பு) ஷேக்ஐயுப்கான், அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், வட்டாட்சியர் (குற்றவியல்) தங்கராஜ், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ரகுமான் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.