தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கம்
திருநெல்வேலி - தென்காசி மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கம் சபாநாயர் அப்பாவு தலைமையில் நடந்தது
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை ஆப்பிள் ட்ரீ ஹோட்டல் கூட்டரங்கில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, இன்று (16.03.2022) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர், மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகளில் துறை சார்ந்த பணியாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் குள்ளத்தன்மை மற்றும் உடல் மெலிவு தன்மையில் மாவட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையை மாற்ற சுகாதார துறையினருடன் இணைந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் செயல்பட வேண்டும். மாவட்டத்திலுள்ள எல்லா குழந்தைகள் மையங்களிலும் குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை வசதி, ஊட்டச்சத்து தோட்டம், சுற்றுச்சுவருடன் கூடிய சுகாதாரமான குழந்தைகள் மையங்களாக மாற்றவும், பழுதடைந்த மையங்களில் பழுது நீக்குதல் போன்ற அடிப்படை வசதிகளை திட்டக்குழு நிதியுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இதில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், மாவட்ட திட்ட அலுவலர் செ.ஜெயசூர்யா, வள்ளியூர் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் அ.ஜொஸிற்றாள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.