நெல்லை:கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் மத்திய அரசு நீட் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற எஸ்டிபிஐ. கட்சி வலியுறுத்தல்.

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி மத்திய அரசு நீட் தேர்வு குறித்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்.எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் வேண்டுகோள்.

Update: 2021-07-13 18:36 GMT

கொரோனா 3வது அலை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நீட் தேர்வு தேதி அறிவிப்பு. மத்திய அரசு தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா பெருந்தொற்று அச்சம் தொடர்வதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கூட மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. ரத்து செய்துள்ளது.

அதேபோல் அனைத்து மாநிலங்களும் ரத்து செய்துள்ளன. மேலும் கொரோனா 3வது அலை குறித்த மருத்துவ வல்லுநர்களின் எச்சரிக்கை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கொரோனா முதல் அலை தொடங்கிய காலத்திலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த சூழலில்,  மத்திய அரசு செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் கொரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்களால் எச்சரிக்கப்படும் காலத்தில் அதனை பொருட்படுத்தாமல் தேர்வுக்கு திட்டமிட்டிருப்பது மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

ஆகவே மாணவர்களின் பாதுகாப்புக் கருதி மத்திய அரசு நீட் தேர்வு குறித்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று   அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News