நெல்லை மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் இன்று 4896 வழக்குகள் விசாரணை
இந்த ஆண்டிற்கான முதல் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் இன்று 9 இடங்களில் நடைபெற்றது.
நெல்லையில் 2022ம் ஆண்டிற்கான முதல் லோக் அதாலத் ஒன்பது இடங்களில் நடைபெற்றது. ஒரே நாளில் 4,800 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு, 50 லட்சம் ரூபாய் வரை சமரச தீர்வு காணப்பட்டது.
நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்க உச்சநீதிமன்ற முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்த டெல்லியில் உள்ள தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் லோக் அதாலத் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டிற்கான முதல் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றம் அம்பாசமுத்திரம், வள்ளியூர் உள்ளிட்ட தாலுகா நீதிமன்றங்கள் என மொத்தம் 9 இடங்களில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா முன்னிலையில் லோக் அதாலத் நடைபெற்றது. நீதிபதிகள் தீபா, குமரேசன், விஜயகுமார், அமிர்தவேலு, இசக்கியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விசாரணை நடத்தினர்.
இதில் நெல்லை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் சமரசம் செய்ய கூடிய குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மொத்தமாக இன்று ஒரே நாளில் நெல்லை மாவட்டம் முழுவதும் 3356 வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 22 வங்கிகள் சார்பில் 1500 கடன் வழக்குகள் என மொத்தம் 4856 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிற்பகல் வரை நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் சுமார் 50 லட்சம் வரை சமரச தீர்வு காணப்பட்டது. அதாவது பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க தீர்வு காணப்பட்டது.