பள்ளி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்
சாப்டர் பள்ளி விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்.
நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து பலியான மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார்.
நெல்லையில் கடந்த 17ஆம் தேதி டவுன் சாப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 மாணவர்கள் பலியானார்கள் மேலும் ஐந்து மாணவர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளியில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து சாப்டர் பள்ளி கட்டிட விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் அளித்தார்.