பிரபல லாலா கடை பக்கடாவில் பல்லி: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
நெல்லையில் உள்ள பிரபல லாலா கடையில் பக்கடா பாக்கெட்டில் பல்லி. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை செய்து கடையை மூடினர்.
பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி. பாளையங்கோட்டையில் இயங்கி வரும் பிரபல லாலா கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து கடையை ஒரு நாள் அடைக்க உத்தரவு.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இயங்கி வரும் பிரபல லாலா கடையான ஸ்ரீராம் லாலா கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பக்கோடா வாங்கிய போது அதில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அக்கடை பெயருடன் கூடிய பாக்கெட்டில் பக்கோடாவுடன் பல்லி பொறியலும் சேர்த்து வழங்குவதாக படங்களுடன் தகவல் வைரலாக பரவியது. இந்த சூழ்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீரென ஸ்ரீராம் லாலா கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பு பலகாரங்கள் கண்ணாடி கொண்டு மூடப்படாமல் திறந்த வெளியில் வைத்தபடி விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் பலகாரங்கள் செய்யும் சமையல் கூடம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. பின்னர் சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்ட ரசகுல்லாவை அதிகாரிகள் கீழே ஊற்றி அழித்தனர். ஜாங்கிரி மற்றும் ஓமப்பொடி ஆகிய பலகாரங்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் 24 மணி நேரத்தில் கடையை சுத்தப்படுத்துவதுடன் பலகாரங்கள் வைக்கப்படும் இடங்களை கண்ணாடி கொண்டு மூடி பாதுகாப்பு ஏற்படுத்தும்படி அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை கடையில் பலகாரங்களை விற்பனை செய்ய கூடாது எனவும், 24 மணி நேரத்திற்கு பிறகு மறு ஆய்வு நடத்திய பிறகே கடையில் மீண்டும் விற்பனையை தொடங்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் பக்கோடாவில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக அதிகாரிகள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது
.மேலும் கடை சுகாதாரமற்ற முறையில் இருப்து தெரிந்தும் குறைந்தபட்சமாக அபராதம் கூட விதிக்காமல் இருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆரியாஸ் போன்ற பிற ஸ்வீட் கடைகளிலும் தீபாவளியை முன்னிட்டு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசி தீபா கூறுகையில்:-
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் இனிப்பு மற்றும் பலகார கடைகளில் சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சுகாதாரமற்ற உணவுகள் விற்கப்படுவது தெரிந்தால் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.