வன விலங்குகளுக்கான மறுவாழ்வு மையங்கள் அமைக்க அரசாணை: எஸ்டிபிஐ வரவேற்பு
வன விலங்குகளுக்கான மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கும் அரசாணை வெளியீடு. வனத்துறையின் நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு.;
வன விலங்குகளுக்கான மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கும் அரசாணை வெளியீடு. வனத்துறையின் நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
வனத்தை விட்டு வெளிவரும் நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் அனாதையான வன விலங்குகளுக்கு அவசர சிகிச்சையளிக்கவும், அவற்றை மீட்டு, மறுவாழ்வு அளிக்கவும் கோவை, முதுமலை, திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வன விலங்குகளுக்கான மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள்' (Rescue, Treatment and Rehabilitation Centres) அமைப்பதற்கான அரசாணையை தமிழக வனத்துறை வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளின் மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் தமிழக வனத்துறையின் மிக முக்கியமான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். தமிழக வனத்துறையின் இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.
தமிழக வனத்துறை திட்டமிட்டிருக்கும் இந்த மையங்களில் வன விலங்குகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் இதர அனைத்து அத்தியாவசிய நோயறிதல் உபகரணங்கள் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட வனவிலங்குகளின் விரைவான மற்றும் சீரான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீட்புக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் இடமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வாழ்விடங்களில் இருந்து வழிதவறி காயம்பட்ட, நோய்வாய்ப்பட்ட வன விலங்குகளை மறுவாழ்வு மற்றும் அடையாளம் காணப்பட்ட வாழ்விடங்களில் விடுவிப்பதற்கான நிபுணத்துவத்துவ சேவையை கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பது என்பது காடுகளை காப்பதில்தான் இருக்கிறது. காடுகள் என்பது வெறும் காடுகள் அல்ல. அதில் வசிக்கும் விலங்குகளையும் சேர்த்துதான். அழிவின் அபாயத்திலிருக்கும் வனவிலங்குகளை பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும். அந்த வகையில் தமிழ்நாடு வனத்துறை மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.