வாக்களிக்க மறுத்த கணவனை தாக்கிய கும்பல்: குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
வாக்களிக்க மறுத்த கணவனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை முயற்சி.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மறுத்ததால் கணவனை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 4 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை முயற்சி.
நெல்லை மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜயாபதி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சகாயராஜ் என்பவருக்கு வாக்களிக்க மறுத்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜன் என்பவரை சகாயராஜ் ஆதரவாளர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜன் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக ராஜன் தரப்பில் அவரது மனைவி சுமதி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமதி அவரது 4 குழந்தைகள் உடன் மனு அளிக்க வந்த போது கையில் மண்ணெண்ணெய் பாட்டிலை வைத்து தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் அங்கிருந்த காவல்துறையினர் சுமதியின் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கியதுடன் நான்கு குழந்தைகளையும் மீட்டனர்.
இதனை தொடர்ந்து காவல் துறை உயரதிகாரிகள் சுமதியிடம் இருந்த புகார் மனுவை பெற்று மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளிக்க அழைத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக மனு பெரும் குறைதீர் கூட்டம் நடைபெற்ற நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மறுத்ததாக கூறி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.