குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பயன்படுத்திய மின்மோட்டார்கள் பறிமுதல்
சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 13 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணயைாளர் பா.விஷ்ணுசந்திரன் எச்சரித்துள்ளார்.
மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் குழாயில் இருந்து நேரடியாக குடிநீர் பெறப்படுவது கண்டறியப்பட்டாலோ, வீட்டு குடிநீர் இணைப்புகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது கண்டறிபட்டாலோ, மேற்படி கட்டடத்திற்கான குடிநீர் இணைப்பானது நிரந்தமாக துண்டிப்பு செய்யப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என கடந்த 24-04-22 பத்திரிகைகள் வாயிலாக மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று (08-05-22) சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவானது பாளையங்கோட்டை மண்டலம் வார்டு 36 காந்திநகர் பகுதி வீடுகளில் உதவி செயற்பொறியாளர் சாந்தி தலைமையிலான குழு திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 7 மின்மோட்டார்களும், அதே போன்று மேலப்பாளையம் மண்டலம் 5வது தெரு ராஜா நகர் பகுதி வீடுகளில் உதவி செய்பொறியாளர் ராமசாமி தலைமையில் 6 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்தனர்.