நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கும், மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Update: 2021-04-24 12:00 GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தட்டுப்பாட்டை காரணம் காட்டி திறக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தினால் மூடப்பட்டது. இந்த போராட்டத்தில் 13 க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்கள்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதினால் அதன் சிகிச்சைக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுவதை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையில் செயல்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை செயல்படுத்தலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது . மாநில அரசும் இதற்கு மறைமுக ஆதரவாக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் என்ற ஒரு நாடகத்தை நடத்தியதாக பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, பின்வாசல் வழியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கும் மத்திய மாநில அரசைக் கண்டித்து பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட பொறுப்பாளர் அன்பு தலைமையில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்பு தெரிவித்தும் முழக்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News