நெல்லையில் பேருந்து படிக்கட்டில் தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம்
நெல்லை பேருந்து கூட்ட நெரிசலில் சிக்கி படியில் தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயமடைந்தார்.
நெல்லை சாந்திநகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நாகநாராயணி. இவர் பேட்டை மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இவர் இன்று கல்லூரிக்கு செல்வதற்காக சாந்திநகர் வசந்த மகால் பஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் உள்ளே செல்ல முடியாமல் படிக்கட்டில் பயணம் செய்யும் போது தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் செல்லும் பேருந்துகளில் இடமில்லாமல் படியிலேயே தொங்கியபடி தொடர்ந்து இருந்து வந்த நிலையில் இன்று இந்த மாணவி கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.