பாளை சிவன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருந்திருவிழா தேரோட்டம்
பாளையங்கோட்டை சிவன் கோவிலில் சித்திரை பிரம்மோற்ச்சவ பெருந்திருவிழா திருத்தேரோட்டம் இன்று சிறப்பாக நடந்தது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திரிபுராந்தீசுவரர் கோவில். தாமிரபரணி நதி தீரத்தில் வரலாற்று பெருமையும், பழமையும் கொண்ட கோவிலாகும். இத் திருக்கோவில் கடன் நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறுகின்ற விழாக்களில் சிறப்பு பெற்ற சித்திரை பிரம்மோற்சவ பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
கடந்த 7ந்தேதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ காலங்களில் தினசரி காலையில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் இரவில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து முக்கிய திருவிழாவான தோ்திருவிழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. முன்னதாக சுவாமி - அம்பாள் கோவிலில் இருந்து திருத்தேருக்கும் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் தேரை சிவ கோஷத்துடன் 4 ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து கோவில் நிலையம் சேர்த்தனர். 10 நாள் திருவிழாவான நாளை தீா்த்தவாாியும், 11ம் நாள் 100 ஆண்டுகள் கழித்து தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றது.