தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கல்
பாளையங்கோட்டையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 1012 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.;
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூயயோவான் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப் ஆகியோர் முன்னிலையில் இன்று (04.12.2021) தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 10 இலட்சம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்கள். கடந்த மாதம் கோயம்பத்தூரில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் 85,000 நபர்களுக்கு வேலை கிடைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்ற அரசானை வெளியீட்டுள்ளார்கள். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்க தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனத்திற்கு பல்வேறு சலுகைகளை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. சிறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 98 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு அவர்களது நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கப்படுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில், காணி பழங்குடியின பள்ளியில் பயின்று 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி சந்தியா, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் மூலம் அப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் திறன்பயிற்சி வகுப்பில் 5 மாதம் பயிற்சி பெற்றதன் மூலம், இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் BOSCH நிறுவனத்திற்கு தேர்வு பெற்றதற்காக மாணவி சந்தியாவுக்கு பணிநியமன ஆணை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.
இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 6000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் 1012 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இம்முகாமில் பாரம்பரிய சத்தான உணவு குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரங்கம் அமைக்கப்பட்டு, விளக்கமளித்து வருகின்றனர். கைவினைப் பொருட்கள் தயாரிப்பதும் குறித்து இளைஞர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. அதைப்போல நெல்லை கிராப்ட் மற்றும் காணி இன பழங்குடி மக்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாம்களை சிறப்பாக ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு பாராட்டுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு பேசியதாவது:-
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் சிறப்பு அம்சமாக பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கங்கைகொண்டான் பாஷ் (BOSCH) லிமிடெட் நிறுவனம் ஆகியோர் கிடையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் முன்னிலையில் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிதாக கைவினைஞர் பயிற்சி மையம் (Bosch Artesian Training centre) துவங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி மையத்தில் திருநெல்வேலி பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள எட்டாம் வகுப்பிற்கு மேல் படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரிசியன் மற்றும் வயர்மேன் சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் எவ்வித கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு அரசு சான்றிதழ் வழங்கப்பட்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் ஒரு வருடத்திற்கு நூறு மாணவர்கள் பயன்பெறுவார்கள். அரசு தகவல் தொழில் நுட்பத்துறையில் பல புதிய அறிவியல் கண்டபிடிப்புகளுக்கு தமிழ்நாடு அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுத்து வருகிறது. சாமனியர்களும் புதிய தொழில்களை தொடங்குவதற்காக தமிழ்நாடு அரசு StartupTN நிறுவனத்தை அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் GovTechThon என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதில் தற்போது திருநெல்வேலி மாவட்ட மக்களின் வசதிக்காக நான்கு வெவ்வேறு பிரச்சனைகளை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டைப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை மறு சீரமைக்கும் வகையிலான அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்படுத்தப்பட்ட தீர்வு போன்ற 4 விதமான பிரச்சனைகளுக்கான விபரங்களை https://tirunelvelistartups.com என்ற இணையதளத்தில் காணலாம். இத்தீர்வுகளுக்கு சிறப்பான கண்டுபிடிப்புகளை தயார் செய்து செயற்கை நுண்ணறிவு ஐ.ஓ.டி செல்போன் செயலி, சாட்பாட் என்ற மெய்நிகர் உதவி போன்ற புதிய தொழில் நுட்பங்களை கொண்டு தீர்வுகளை மேலே உள்ள இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள 4 தீர்வுகளுக்கும் முறையான திர்வு வழங்குபவருக்கு தலா ரூ.2 இலட்சம் வீதம், பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.8 இலட்சம் வழங்கப்படும் எனவும், இந்த தீர்வை நோக்கிய பயணத்தில் மாணவர்கள், தொழில் நுட்பத்துறை வல்லுநர்கள் ஸ்டார்டஅப் நிறுவனங்கள் துறை வல்லுநர்கள் போன்ற யாவரும் இதில் கலந்து கொண்டு தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்று மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் ஜோதிமணி, தூயயோவான் கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ஜெ.வே.சாந்தி, உதவி இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஹரிபாஸ்கர், துணை இயக்குநர் அரசு தொழிற் பயிற்சி நிலையம் பேட்டை செல்வகுமார், BOSCH நிறுவன மேலாளர்கள் பிரசாந்த், (தொழில்நுட்பம்) முரளி (வணிகம்) மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள், வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.