உள்ளாட்சி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ளாட்சி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகம்மது லெப்பை வீட்டில் சோதனை.

Update: 2021-12-01 06:57 GMT

நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ளாட்சி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகம்மது லெப்பை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் உள்ளாட்சி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு'

தமிழகத்தில் உள்ளாட்சி துறை மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி என மூன்று அடுக்குகளை உள்ளடக்கியது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைவராக கொண்டு செயல்படும் மாவட்ட வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் இயங்குகின்றன. கிராம பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் இவை தவிர அரசு அதிகாரிகள் கிடையாது என்பதால் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் இவைகள் இருக்கின்றன. இந்த ஊராட்சி ஒன்றியங்களின் வரவு, செலவு திட்ட பணிகள் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்ய உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உள்ளது. பொதுவாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வைத்து தணிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களின் உள்ளாட்சி கணக்கு தணிக்கை கடந்த 29ஆம் தேதி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் வைத்து நடந்தது. மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகமது லெப்பை, தென்காசி தனித்துறை அதிகாரி உமாசங்கர் ஆகியோர் கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது தணிக்கையில் சில விஷயங்களை மறைக்க தணிக்கைத்துறை அதிகாரிகளுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்படுவதாக நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மெக்கேலரின் எஸ்கால் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 88 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இது சம்பந்தமாக தணிக்கைக்குழு உதவி இயக்குனர், தணிக்கை ஆய்வாளர்கள், பஞ்சாயத்து செயலர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ளாட்சி தணிக்கை துறை உதவி இயக்குனர் முகம்மது லெப்பை வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் லஞ்ச பணம் இருக்கிறதா, பணம் பெற்றதற்கான பிற ஆவணங்கள் இருக்கிறதா என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அரசு நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேட்டை அரசுக்கு சுட்டி காட்ட வேண்டிய முக்கிய பொறுப்பு தணிக்கை அதிகாரிகளுக்கு உள்ளது. ஆனால் வேலியே பயிரை மேந்ந்த கதையாக தணிக்கை அதிகாரிகளே லஞ்ச புகாரில் சிக்கிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News