உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஆண்ட ஒரே கட்சி அதிமுக. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம் என்றார்;
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அதிமுகவினர் பணியாற்ற வேண்டும் என்றார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:
நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மேலும் பேசியதாவது: இந்த உள்ளாட்சித் தேர்தல் ஏற்கெனவே நடந்திருக்க வேண்டும். ஆனால், திமுக வேண்டும் என்றே மாவட்டம் பிரிக்கப்பட்டதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்தார்கள். தற்போது கூட உச்சநீதிமன்ற உத்தரவால் தான் தேர்தலை நடத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஆண்ட ஒரே கட்சி அதிமுக தான். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால், தமிழ்நாட்டில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது. அதிமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் இன்று திமுக தொடங்கி வைக்கும் அனைத்து திட்டங்களும் அதிமுக கொண்டு வந்தது தான். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்க 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதன் மூலம் கடந்த ஆண்டில் 435 பேர் மருத்துவர் ஆனார்கள்.
நம்மை பார்த்து தான் ஸ்டாலின் தற்போது பொறியியல் வேளாண் மற்றும் சட்டப் படிப்புகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு நிறைவேற்றியுள்ளார். நமது திட்டம் சிறப்பான திட்டம் என்பதை திமுகவே ஒப்புக் கொண்டுள்ளனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிதியை 4 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக அதிமுக உயர்த்தியது. ஆனால் தற்போது அந்த திட்டத்தையும் பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்து திமுக தடுத்து நிறுத்தி கொண்டிருக்கிறது.
விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தோம். திமுக தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வெளியிட்டது. இதுவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் 525 அறிவிப்புகளை வெளியிட்டது கிடையாது. ஏனென்றால் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதால் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் சில திட்டங்களை மட்டும் அறிவித்து விட்டு அப்படியே விட்டு விட்டார்கள்.
பெட்ரோல், டீசல் விலை குறைந்த அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் எந்த பலனுமில்லை. குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை கொடுக்கவில்லை. திமுக வாக்குறுதியை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. அப்படியே பேசி மயக்கி விடுவார்கள். அப்படி பேச்சில் மயங்கி போனவர்கள் தான் 8 பேர் திமுகவில் அமைச்சராகி இருக்கிறார்கள். ஏன் என்றால் அமைச்சர் ஆகும் தகுதி கூட திமுகவில் யாருக்கும் இல்லை.
நம்மிடமிருந்து போனவர்கள் தான் 15 பேர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் தற்போது கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுகின்றனர். ஆனால் அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார்கள். முதியோர் ஓய்வூதியம் 1500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார்.
ஆனால், அந்த திட்டத்தை நிறைவேற்றாமல், முதியோர்களை ஏமாற்றி வாக்கு பெற்ற ஒரே தலைவர் ஸ்டாலின் தான். மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்யாமல் மாணவர்களையும் ஏமாற்றி வருகிறார். எதுவுமே செய்யாத ஒரு கட்சி திமுக பொய் சொல்வதில் திமுக வல்லவர்கள். திமுக வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.
உள்ளாட்சி தேர்தலில் நமது வேட்பாளர்கள் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எனவே அனைவரும் தாங்களே போட்டியிடுவது போன்று நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி என்பது அடிப்படை அமைப்பு. எனவே இதில் வெற்றி பெற்றால் நம் கட்சி பலப்படும் என்றார் எடப்பாடி பழனிசாமி.
நிகழ்ச்சியில், அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் தசை. கணேசராஜா, மாவட்ட மகளிர ணி செயலாளர் ஜான்சிராணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சிவந்தி மகாராஜன், அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவின் சட்டமன்ற குழுத் தலைவரும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.