நெல்லை ஆடிப்பெருக்கு விழா : பெண்கள் ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு
நெல்லை,தாமிரபரணி ஆற்றுப் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள் மாங்கல்ய பூஜை,சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இன்று ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. திருச்சி காவிரியில் கொண்டாடுவதைப் போல திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு ஓடும் முக்கிய இடங்களில் ஆடிப்பெருக்கு விழா நடப்பது வழக்கம்.
நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்று படித்துறையில் இன்று காலை பெண்கள் சிறப்பு பூஜை நடத்தினர். திருமணம் ஆகாத பெண்கள் விரைவில் தாலி பாக்கியம் கிடைக்கவும், சுமங்கலி பெண்கள் தாலி பாக்கியம் நீடிக்கவும் சிறப்பு பூஜை நடத்தினர். முன்னதாக தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி பூஜையை தொடங்கினர். பெண்கள் தாலியில் மஞ்சள் தடவினர். சில பெண்கள் புதிதாக மஞ்சள் கயிறு அணிந்தனர்.
பின்னர் வெற்றிலையில் மஞ்சள், குங்குமம், பூ, சந்தனம் வைத்து கற்பூரம் ஏற்றி தாமிரபரணி ஆற்றை வழிபட்டனர். ஆடிப்பெருக்கையொட்டி வண்ணார்பேட்டை பேராத்து அம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
தற்போது கொரோனா 3வது அலை பரவும் அபாயம் உள்ளதால் அங்கு அதிக பெண்களை கூட விடாமல் போலீசார் வெளியேறச் செய்தனர்.