நயினார் நாகேந்திரன்செருப்பைக் கையில் எடுத்துச் சென்ற உதவியாளர்!
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்தில், வேட்பாளரின் செருப்பை உதவியாளர் ஒருவர் கையில் எடுத்துச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என அனைவரும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கடந்த 3 நாட்களாக, நெல்லை தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதில், இரண்டு நாட்களாகக் கிராமப்புறங்களில் வாக்கு சேகரித்த நயினார் நாகேந்திரன், இன்று நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட சந்திப்பு மீனாட்சிபுரம், கைலாசபுரம் போன்ற பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பல இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். குறிப்பாக கைலாசபுரம் பகுதியில் 3 பெண்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் உருவம் வரையப்பட்ட தர்பூசணி பழத்தைக் காட்டி வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கைலாசபுரம் பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள கோயிலுக்கு வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனத்திற்காகச் சென்றார். அவர் கோயிலில் வழிபட்டு விட்டுத் திரும்பும் போது, நயினார் நாகேந்திரனின் உதவியாளர் ஒருவர், அவரது செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு சென்ற வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று மத்திய அமைச்சராக வேண்டும் என்பதுதான் நயினார் நாகேந்திரனின் கனவாக உள்ளது. ஆனால், வெற்றி பெறுவதற்கு முன்பே அவரது செருப்பை உதவியாளர் கையில் எடுத்துச் சென்ற சம்பவம் அங்கிருந்த மக்கள் முகம் சுழிக்கும்படி அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று நயினார் நாகேந்திரன் தொடர் சர்ச்சையில் சிக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் நயினார் நாகேந்திரன் பிரசாரத்தில் பெண்கள் பலர் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னம் நெய்யப்பட்ட சேலைகளை அணிந்து, சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தற்போது, இந்த சேலைகள் வேட்பாளர் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்டதா? அல்லது கட்சி சார்பில் வழங்கப்பட்டதா? என்ற சந்தேகம் தேர்தல் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.