ஒரு இஸ்லாமியர் இல்லை.. கிராமமே கொண்டாடிய இஸ்லாமிய விழா!

இஸ்லாமியர்களே இல்லாத கிராமத்தில் நடைபெற்ற இஸ்லாமிய விழா திருநெல்வேலி அருகே சுவாரஸ்ய நிகழ்ச்சி

Update: 2023-08-02 05:24 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்காவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்தக்காட்டாக வருடந்தோறும் நடைபெற்று வரும் கந்தூரிவிழா நேற்று நடைபெற்றது.

விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழா வருடந்தோறும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இஸ்லாமிய விழாக்கள் பிறையைக் கொண்டே கணக்கிடப்படும். ஆனால் இந்த தர்கா கந்தூரி விழா பிறையைக் கணக்கில் கொள்ளாமல் ஆடி மாதம் 16ம் தேதி நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஊரில் ஒரு இஸ்லாமிய குடும்பம் கூட கிடையாது. ஆனால் தமிழகம் எங்குமிருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு தங்கள் தாய்பிள்ளைகளாக இங்குள்ள கிராமத்தினரே அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, பாதுகாப்பும் உணவும் கொடுக்கிறார்கள். அவர்களே விழாவை முன்னின்று நடத்துகிறார்கள்.

நேற்று நடந்த தர்கா கந்தூரி விழாவில் மேத்த பிள்ளையப்பா வாழ்ந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. இதில் திரளான இஸ்லாமியர்கள் நாரே தகுபீர் அல்லாகு அக்பர் என பக்தி கோஷமிட்டு ஊர்வலமாக தர்காவுக்கு வந்து சேர்ந்தனர். பின் தர்காவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு துவா ஓதப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் பிற மாநிலங்களிலுமிருந்து திரளான இஸ்லாமியர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News