துரைமுருகன் திடீரென கைது: அவதூறு பேச்சால் எழுந்தது சிக்கல்
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய புகாரில், யு டியூபர், துரைமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில், ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாடம் நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து, இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன், தமிழக முதல்வர் குறித்தும், அரசு குறித்தும் மிக கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த சூழ்நிலையில், ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு சாட்டை துரைமுருகன் நெல்லை வழியாக சென்றபோது , நள்ளிரவு மாநகர போலீசாரால் நெல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர், நெல்லை மாநகர போலீசார் சாட்டை துரைமுருகனை, முறைப்படி தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து தக்கலை போலீசார் பத்மநாபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீன தயாளன் முன்பு ஆஜர்படுத்தினர்; அவரை வரும் 25-ஆம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்படடார்.
யூடியூபர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு பொது மேடைகளில் பேசி வருகிறார். குறிப்பாக பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் பேசி, கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.