நெல்லையில் 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது : ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்களிப்பு

நெல்லையில் 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Update: 2021-10-09 03:07 GMT

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது.

ஆண்கள் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 722 பேரும், பெண்கள், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 91 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் என மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 826 பேர் இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இதையொட்டி 568 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 151 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்பதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 39 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 4516 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கவுன்சிலர்கள், ஓன்றிய கவுன்சிலர்கள் உள்பட 956 பதவிகள் காலியாக இருந்த நிலையில் அதில் 173 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியிருப்பதால் மீதமுள்ள பதவிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

வேட்பாளர்களைப் பொறுத்தவரை மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு 27 பேர் உள்பட மொத்தம் 2516 பேர் இன்று நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட தேர்தலில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவில் முறைகேட்டை தடுக்க 12 பறக்கும் படை குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பி ஏழு டிஎஸ்பிக்கள் உள்பட 2500 காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருக்கின்றனர். தொடர்ந்து மாலை 5 மணிவரை பொதுமக்களுக்கும், 5 மணி முதல் 6 மணி வரை கொரனோ நோயாளிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நெல்லையில் ஏற்கனவே அம்பாசமுத்திரம், மானூர், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த்து. தொடர்ந்து இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News