கனிம வளங்களை பாதுகாப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட கனிம வளங்களை பாதுகாப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மற்றும் மணல் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கனிம வளங்களை பாதுகாப்பது தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் ( District Level Task Force Committee ) மற்றும் மணல் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் (Sand Co-ordination Meeting) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், சேரன்மகாதேவி மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முறைகேடாக கனிமங்கள் வெட்டியெடுத்தல் மற்றும் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாவட்ட கண்காணிப்புக்குழு அலுவலர்களால் விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டாட்சியரும் வட்ட அளவிலான ஆய்வுக்குழு கூட்டத்தை மாதம் இரண்டு முறை கூட்டி கனிமம் மற்றும் சுரங்கம் தொடர்பான புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு கூட்டத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அஞ்சு கிராமம் மற்றும் காவல்கிணறு சோதனை சாவடி வழியாக மட்டும் செல்ல வேண்டும். மேற்படி சோதனை சாவடிகளின் வழியாக வாகனங்கள் செல்லும் போது வாகனத்தில் உள்ள கனிமத்தின் வகை, அளவு, நடைச்சீட்டு அனுமதி காலம் மற்றும் மெய் இலச்சு (Hologram) ஆகியவற்றை சரிபார்த்து மீண்டும் மறுமுறை உபயோகிக்காத வண்ணம் காவல் துறையினர் ஃ இதர அதிகாரம் பெற்ற அலுவலர்களால் நடைச்சீட்டில் Punching செய்யப்படவேண்டும்.
சட்ட விரோதமாக கனிமங்களை தோண்டி எடுத்தல், கொண்டு செல்லுதல், இருப்பு வைத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும் தங்கள் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் உடனடியாக வருவாய் வட்டாட்சியர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் மற்றும் காவல் துறை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
வாகன தணிக்கையின் போது உரிய நடைச்சீட்டு இல்லாமல் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனம் கைப்பற்றப்பட்டு ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர் மீது கனிமம் மற்றும் சுரங்கம் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1957, பிரிவு 4 (1A) & 21, 1959- ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், விதி எண். 36(A)-ன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 379 மற்றும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிக அளவில் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 1989-ன் படியும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.