நெல்லை மக்களே..! மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பம் தர்றாங்க.. நீங்க வாங்கிட்டீங்களா?

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் கிடைத்துவிட்டதா?

Update: 2023-08-02 06:55 GMT

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வாங்கிவிட்டீர்களா? இல்லையென்றால் உங்களுக்கான நியாயவிலைக் கடையில் கேட்டுப்பாருங்கள்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. திமுக வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் இந்த மகளிர் உரிமைத் தொகை பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அரசு தரப்பில் தாமதம் ஏற்படுவதற்காகன காரணத்தையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மகளிருக்கு 1000 ரூபாய் தகுதி வாய்ந்த குடும்ப பெண்களுக்கு கிடைக்கும் என முதலமைச்சர் அறிவித்தார். அதற்கான தகுதிகளும் விவரங்களும் உடனடியாக வெளியிடப்பட்டன. ஊடகங்களிலும், அரசு விளம்பரங்களிலும் இதுகுறித்து தகவல் வெளியாகின.

அதன்படி, கடந்த மாதம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டன. வீடு வீடாக நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும் என கூறப்பட்டது. கடந்த வாரம் அனைத்து மாவட்டங்களிலும் புறநகர் பகுதிகளில் சென்று வீடு வீடாக விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் கொடுத்தனர்.

இந்நிலையில் மாநகர பகுதிகளிலும் நேற்று முதல் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இதற்கென கூட்டுறவு பணியாளற்கள், நியாய விலைக்கடை ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பல்வேறு குழுக்களாக பிரிந்து மாநகர பகுதிகளில் உள்ள 55 வார்டுகளிலும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சி வண்ணார்பேட்டை, மீனாட்சிபுரம், சிந்துபூந்துரை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தை கொடுத்து வருகின்றனர். டோக்கன்களையும் விநியோகித்து வருகின்றனர். அந்த டோக்கன்களில் எந்தெந்த தேதிகளில் யார் வரவேண்டும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த நேரத்தில் பெண்கள் தங்களுக்குரிய ரேசன் கடைகளுக்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

Tags:    

Similar News