நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.;

Update: 2023-10-29 08:24 GMT

நெல்லை டவுனில் பழைமை வாய்ந்த சுவாமி நெல்லையப்பா் உடனுறை காந்திமதி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 7.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் நடை பெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் காந்திமதி அம்பாள் டவுனில் உள்ள 4 ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

வருகிற 8ம் தேதி அதாவது 11-ம் திருநாள் அன்று மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

அதன்பின் மறுநாள் 9ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடை பெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டின பிரவேசமும், பின்னா் 3 நாட்கள் மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகிறது.

முடிவாக வருகிற 12ம் தேதியன்று சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேச வீதிஉலா நடைபெறுகின்றது.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் நிர்வாகத்தினா், உபய தாரா்கள் செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News