அதிநவீன ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
நெல்லை மாநகர் பகுதியான என்.ஜி.ஓ காலனி பகுதியில் அதிநவீன ட்ரோன் மூலம் பரிசோதனை முயற்சியாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை மாநகர் பகுதியான என்.ஜி.ஓ காலனி பகுதியில் அதிநவீன ட்ரோன் மூலம் பரிசோதனை முயற்சியாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளரும், நெல்லை மாவட்ட கொரோனா தடுப்புப்பணி கண்காணிப்பாளருமான அபூர்வா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 600 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெல்லை மாநகர் பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி, வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் வகையில் பரிசோதானை முயற்சியாக ஐந்து ட்ரோன்கள் மூலம் மாநகருக்கு உட்பட்ட என்.ஜி.ஓ காலனிப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதனை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளரும் , நெல்லை மாவட்ட கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியுமான செல்வி அபூர்வா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ட்ரோன் மூலம் 6 நிமிடத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு அளவி்ல் கிருமி நாசினி தெளிக்கமுடியும்
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பரிசோதனை முயற்சியாக அதிநவீன ட்ரோன் மூலம் கிருமி நாசினி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் தெளிக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே சென்னையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அடுத்த படியாக நெல்லையில் செய்துள்ளோம் . இதில் தெளிக்கபடும் கிருமிநாசினி பயோ முறைப்படி தயாரிக்கப்பட்டது, இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது, புகையாகத்தான் வெளிப்படும் இந்த முறை பலன் கொடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளுக்கு விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைக்கு ஏற்ப கிடைகிறது என தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்