பாபநாசம் அணையில் இருந்து விவசாயம், குடிநீருக்கு தண்ணீர் திறப்பு
பாபநாசம் அணையில் இருந்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக, இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 143 அடி கொள்ளவு கொண்ட பாபநாசம் அணை, இன்றைய நிலவரப்படி 135.45 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1308 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் கீழ் உள்ள வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால் , கீழ கால்வாய், தெற்கு மற்றும் வடக்கு பிரதான கால்வாய் ஆகியவற்றின் கீழ் உள்ள, நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்புகளுக்கு பருவ சாகுபடிக்கும், பொதுமக்களின் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்காக, இன்று பாபநாசம் , மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, இன்று பாபநாசம் அணையில் இருந்து, சபாநாயகர் அப்பாவு, தண்ணீரை திறந்து வைத்தார் . இன்று முதல், 31-03-21 முடிய 151 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது 1400 கன அடித்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப நீர் வரத்து மற்றும் நீர் இருப்பினை பொறுத்து, தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 86.107 ஏக்கர் பாசன நிலங்களும் , 185 குளங்களும் பயன்பெறும்.
சபாநாயகர் அப்பாவு கூறுகையில், தண்ணீர் திறப்பின் மூலம் நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் மற்றும் 185 குளங்கள் பயன்பெறும் . மாவட்டத்தில் 76 வேளாண் தொடக்க கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நஞ்சை பயிருக்கு 30 ஆயிரமும், வாழைக்கு 69 ஆயிரமும் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் , நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.