பாபநாசம் கல்யாண தீர்த்தத்தில் அகஸ்தியர் புதிய சிலை நிர்மாணிக்கும் பணி தொடக்கம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாணதீர்த்தத்தில் லோபமுத்ரா சமேத அகஸ்தியர் சிலை நிர்மாணிக்கும் பணி துவங்கியது
அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்தத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட லோபமுத்ரா சமேத அகஸ்தியர் சிலைக்குப் பதிலாக புது சிலைகளை அங்கு நிர்மாணிக்க அறநிலையத்துறையினர் முதற்கட்டப் பணிகளை செய்து வருகின்றனர்.பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்தத்தில் லோபமுத்ரா சமேத அகஸ்தியர் சிலைகள் நிர்மாணிக்கும் பணி துவங்கியது.
கல்யாண தீர்த்தத்தில் அகஸ்தியருக்கு லோக நாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலைகள் நிர்மாணம் செய்யப்பட்டன. இந்து சமய அரத்துறை அறநிலையத் துறையினரின் ஆலோசனைப்படி சென்னையை சேர்ந்த டாக்டர்.ரவிக்குமார் சார்பில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு நிர்மாணிக்கப் பட்ட லோபமுத்ரா சமேத அகஸ்தியர் சிலைகள் கடந்த ஆண்டு ஜனவரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாண தீர்த்தத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த கோயில் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சேதமடைந்த கோயில் மற்றும் கோயில் பகுதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அறநிலையத்துறையினர் உறுதியளித்தனர். இதனால் கல்யாண தீர்த்தத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட லோபமுத்ரா அகஸ்தியர் சிலைகள் முதலில் நிர்மாணிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக புது சிலைகள் தயார் செய்யப்பட்டன. இச்சிலைகளை கல்யாண தீர்த்தத்தில் நிர்மாணிக்க வேண்டிய முதற்கட்டப் பணிகளை இந்து அறநிலையத்துறையினர் துவங்கி உள்ளனர்.