எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் கிடைக்கும் மரியாதை- ஆதவன் நினைவு நாள்

எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் கிடைக்கும் மாபெரும் மரியாதையான நிராகரிப்பு, மறதி - ஆதவன் நினைவு நாள்;

Update: 2021-07-19 02:37 GMT

 ஆதவன் 

எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் கிடைக்கும் மாபெரும் மரியாதையான 'நிராகரிப்பு, மறதி - ஆதவன் நினைவு நாள்

ஆதவன் தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எஸ்.சுந்தரம் . 1942 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் தேதி பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.


ஆதவன் 1942 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டில்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987ஜூலை 19 ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.

மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கப்பட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.

எழுத்தாளர் ஆதவனைப் பற்றி மீண்டும் இன்றைய காலகட்டத்தில் பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழ் எழுத்துலகத்திற்கும் சிந்தனை மரபிற்கும் அவர் அளித்துள்ள பங்களிப்பு குறைத்துச் சொல்லப்பட முடியாதது. அதுவரை தமிழ் எழுத்து மரபில் காணக்கிடைக்காத பல அம்சங்களோடு தமிழ் படைப்புலகிற்குள் பிரவேசித்தவர் ஆதவன்.

கூர்மையான படைப்பாளிகள், காலத்திற்கு முன் தோன்றிவிடுபவர்கள். அவர்கள் வாழும் காலத்தில், அவரது எழுத்துக்கள் கவனிக்கப்படாமல், அனைத்துவித தவிர்த்தல், விலக்குதலுக்கும் ஆட்படும் அபாயம் பல எழுத்தாளர்களுக்கு நேர்ந்துள்ளது. ஆதவனை அவ்வகை எழுத்தாளர்களில் சேர்ப்பது பொருத்தம் என்றே கருதுகிறேன்.

நாற்பத்தைந்து வயதே (1942-1987) வாழ்ந்த ஆதவன், தன் வாழ்நாளில் குறிப்பிடத் தகுந்த பல படைப்புகளை தந்திருப்பதுடன், தமக்கான ஓர் இடத்தையும் உருவாக்கிக்கொண்டுள்ளார். முதலில் இரவு வரும், கால்வலி, இரவுக்கு முன் வருவது மாலை ஆகிய சிறுகதைத் தொகுதி களையும், காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், பெண் தோழி தலைவி ஆகிய நாவல்களையும் புழுதியில் வீணை என்ற பாரதியாரைப் பற்றிய நாடகத்தை வழங்கியுள்ள ஆதவன், மதுரம் பூதலிங்கம் (கிருத்திகா) எழுதிய பாலர் ராமா யணத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவருடைய படைப்புகளுக்காக அவருக்கு சாகித்திய அகாதமி பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆதவனின் முக்கியப் பங்களிப்பு என்று நோக்கும் போது, இரண்டு மூன்று செய்திகளைச் சொல்ல வேண்டும். முக்கியமானது, அதுநாள் வரை தமிழ் எழுத்துலகு என்பது வெகுஜன, மத்தியத் தர, நகரம் சார்ந்த வாழ்வையும் மொழியையும் எடுத்தாண்டு வந்தாலும், அதில் நேர்மையோ, தத்துவப் பின்புலமோ இல்லாதிருந்தது.

ஆதவன் நகரம் என்பதன் முழுப் பரிமாணத்தையும் அவரது எழுத்தில் கொண்டு வந்தவர். டில்லியிலேயே தம் இளமைக்காலம் முதல் இருந்த ஆதவன், அதன் மதிப்பீடுகள், சிக்கலான வாழ்க்கை முறை, போக்குவரத்து, ஜனநெரிசல் என்று நகரின் மனநிலையை ஆழமாகப் படம் பிடித்தவர். அப்படிப்பட்ட ஒரு நகரம் எப்படிப்பட்ட மனநிலையை அதன் மக்களுக்கு வழங்கும் என்பதை யோசிப்போமானால், அதுவே ஆதவனின் எழுத்தில் பிரதிபலிப்பதைக் காண முடியும்.

ஆதவனின் கதைகள் அத்தனையும் உள்முகப் பயணங்களே. சரி, தவறு என்று விழுமியக் குழப்பம் என்பது சுதந்திரம் பெற்றபின், மேற்குலகோடு கல்வி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் தொடர்கொள்ளத் துவங்கிய இந்தியச் சமூகத்தில் பெருமளவில் உருவாகத் தொடங்கியது. அதே போல், நான், நீ என்ற இருதுருவ நிலைப்பாடும், இந்தியச் சமூகத்தில் வேரூன்றத் தொடங்கியது. மேலும் ஆண், பெண் இடையே மரபாக இருந்துவந்த சிக்கல்கள், வேறுவித பரிமாணங்களை எட்டத் தொடங்கியது, சுதந்திரத்திற்க்குப் பிந்தைய அறுபதுகளிலும் எழுபதுகளிலுமே.

இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் அதன் தீவிரத் தன்மையோடே பதிவு செய்தவர் ஆதவன். அவரது புகழ்பெற்ற கதைகளான, ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும், நிழல்கள், மூன்றாமவன் போன்றவை மிக நளினமாக இந்த செய்திகளைப் பதிவு செய்திருக்கின்றன. அந்த வகையில், தமிழ் எழுத்துக்கு, ஆதவனின் இந்த முகம் மிகவும் புதியது.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் டில்லி போன்ற பெருநகரங்களில் தென்பட்ட கூறுகள், இன்று சிறுநகரங்கள் வரை வியாபித்திருப்பதை அறிகின் றோம். இதுதான் எழுத்தின் வலிமை. உருவாகிவரும் ஒரு போக்கை இனங்காண முடிவது அவரது படைப்பு சாதனை. கூடவே, சிறுகதைகள் படைப்பதைப் பற்றி, ஆதவன் கூறியதை இங்கே கவனத்தில் கொள்வதும் பொறுத்தமாக இருக்கும்.

"கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை, தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத் துக்கிமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதி யான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும் சோர்வு களையும், ஆரோகண அவரோகணங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்."

படைப்புச் சாதனைகளின் ஊடாக வேறு பல முக்கியக் கூறுகளும் வெளிப்படுவதை நான் ஆதவனின் படைப்புக்களில் காண முடிகின்றது. முக்கியமாக, அடாலஸண்ட் சைக்காலஜி. காகித மலர்களும், என் பெயர் ராமசேஷனும் இந்த வகை மனநிலையை எழுத்தில் கொண்டு வந்து மிகப்பெரும் வெற்றி பெற்றவை.

சிக்கல்கள் பற்றி மிக விரிவாக எழுதியுள்ள ஆதவன், தீர்வுகள் பற்றி யோசிப்பதோ கைகாட்டுவதோ போன்ற வேலைகளில் இறங்குவதில்லை. அசல் கலைஞனுக்கு அது வேலையுமல்ல. ஒவ்வொருவரும் அந்தந்த வேளைகளில் எடுக்கும் தீர்வுகள் மட்டுமே உண்டு. அதைப் பொதுமைப்படுத்துவது தகாத செயல். அதேபோல், இந்த சிக்கல்கள் எளிமையான தீர்வுகள் திருப்தியடைந்துவிடப் போவதுமில்லை.

மற்றொரு செய்தி, ஆதவன் படைப்புகளில் காணக் கிடைக்கும் நம்பிக்கை வறட்சி. மிக இயல்பாக வெளிப்படும், இந்த வறட்சி, இன்றைய சமூகத்தின் முக்கிய பகுதி. இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் கதைகள் தொகுதிக்கு எழுதியிருக்கும் முன்னுரையில், இந்த வறட்சி பற்றி இப்படி பேசுகிறார்.

நிகழ்காலம் நரகம், வருங்காலம் சொர்க்கம், நிகழ்கால விரக்தியைத் தவிர்க்க முடியாது. ஆனால் 'நாளைக்கு' என்பதும், 'இன்றைக்கு' என்று ஆகிவிட்டால், அப்பொழுதும் சொர்க்கம் நரகமாகிவிடும். அது, நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய 'நாளை'யாக இருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கியிருக் கிறது. இந்த எதிர்பார்ப்புதான் வாழ்க்கையின் கால அட்டவணை."

குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய செய்தி, இப்படியெல்லாம் எழுதியுள்ள ஆதவன்தான், மிக நளினமான காதல் கதைகளையும் எழுதியுள்ளார். உணர்வுபூர்மான இந்த விஷயத்தைத் தொடும் போதும், ஆதவன் தனக்கேயுரிய உள்மன அலசல்கள், மாற்றங்களின் மூலம்தான் கட்டமைத் துச் செல்கிறார்.

ஆதவன் பற்றி நமக்குக் கிடைக்கும் வாழ்க்கைக் குறிப்புகள் வெகு சிலவே. அவரது எழுத்து பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. அவரது வாசிப்பு, அனுபவங்கள், ரசனைகள் என்று பல முக்கியப் பகுதிகள் நமக்குத் தெரியாமலேயே இருக்கின்றன.

அதைவிட முக்கியம், அவரது படைப்புகள் இன்று மறுபதிப்பு இல்லாமல், யார் கவனத்துக்கும், மறுபார்வைக்கும் கிடைக்காமல் இருக்கின்றன. அவரைப் பற்றிய அலசலோ, விமர்சனமோ அவர் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்னரும் கூட எழுதப்பட்டதாகத் தெரியவில்லை.

எல்லா தமிழ் எழுத்தாளர்களுக்கும் கிடைக்கும் மாபெரும் மரியாதையான 'நிராகரிப்பு, மறதி' ஆகியவையே ஆதவனுக்கும் கிடைத்திருக்கிறது என்று பெருமிதத்தோடு சொல்லிக்கொள்ளலாம்

Tags:    

Similar News