ஓபிஎஸ்- இபிஎஸ் இணைய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேட்டி…

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார்.;

Update: 2022-11-18 12:54 GMT

திருநெல்வேலியில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 86 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள வஉசி மணி மண்டபத்தின் உள்ளே அமைந்துள்ள வஉசி திருஉருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் தயார் சங்கர் மற்றும் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நயினார் நயிகேந்திரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை அமைப்பு ரீதியான பணிகளை நாடாளுமன்ற தேர்தலுக்காக தயார் செய்து வருகிறோம். அதிமுக-பாஜக கூட்டணி என்பதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. யார் தலைமையில் கூட்டணி என்பதிலும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

தமிழகத்தில் பொதுமக்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பாரத பிரதமர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகம் வந்து பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சர்களின் வருகை தமிழகத்தில் இனியும் தொடரும். பத்து சதவீத இட ஒதுக்கீடை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்பது எதிலும் இல்லை. இந்த இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பல தரப்பினரும் உள்ளனர்.

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக எதிராக முடிவு எடுத்துள்ளது. நீதிமன்றத்தையும் அவர்கள் நாடி உள்ளனர். தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசாங்கம் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்.

அதிமுகவில் பிரிந்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் பலம். ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் அனைத்து தரப்பும் ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது. தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணியை வைக்க கூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளது சூழலில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளது. திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இதுவரை செய்த பணிகளைபோல, நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து பணிகளை மேற்கொள்வேன் என நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார்.

Tags:    

Similar News