திருநெல்வேலி மாநகராட்சி-குறைகளை குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க ஆணையர் வேண்டுகோள்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை குறுஞ்செய்தியாக தெரிவிக்க ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
திருநெல்வேலி மாநகராட்சியில் குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் மற்றும் குறைபாடுகளை 94899 30261 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கும் வசதியினை பொது மக்கள் பயன்படுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் பா.விஷ்ணுசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் பகுதியில் குப்பை, வடிகால், பொதுசுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை, தெருவிளக்கு மற்றும் பாதாள சாக்கடை தொடர்பான குறைபாடுகளை மாநகராட்சிக்குத் தெரிவித்து தீர்வு காணும் பொருட்டு ஏற்கனவே நடைமுறையில் 94899 30261 என்ற வாட்ஸ்அப் எண் வசதி பயன்பாட்டில் உள்ளது.
மேலும் கோவிட்-19 அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றும் விதமாக பொதுமக்கள் 94899 30261 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக தாங்கள் கோரும் அடிப்படை கோரிக்கைகளை பதிவு செய்துகொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் கோரிக்கைகள் பெறப்பட்டமைக்கான ஏற்பளிப்பு சம்பந்தப்பட்ட கோரிக்கைதாரரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
அத்துடன் அக்கோரிக்கையானது மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு செய்தியாக அனுப்பப்படும். கோரிக்கை நிறைவேற்றப்பட்டதும் அது பற்றிய விவரம் மனுதாரரின் அலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கப்படும்.
எனவே இந்த சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.