நெல்லையில் 5 சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதியிலும் பதிவான வாக்குகளில் எண்ணிக்கையானது திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வைத்து நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன தொகுதி வாரியாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
சரியாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியது. தபால் வாக்குகளை தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. நெல்லலையில் அதிகபட்சம் அம்பாசமுத்திரம் தொகுதியில் 72.05 சதவீத வாக்குகளும் நாங்குநேரியில் 68.60 சதவீத வாக்குகளும், ராதாபுரத்தில் 67.54 சதவீத வாக்குகளும், திருநெல்வேலியில் 66.90 சதவீத வாக்குகளும் பாளையங்கோட்டையில் 57.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தொகுதிவாரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்குகளை அலுவலர்கள் எண்ணி வருகின்றனர். அதிகபட்சம் திருநெல்வேலியில் தொகுதியில் 30 சுற்றுகளாகவும், நாங்குநேரியில் 29 சுற்றுலாகளாகவும், பாளையங்கோட்டையில் 28 சுற்றுகளாகவும், ராதாபுரத்தில் 27 சுற்றுகளாகவும், வாக்குகள் எண்ணப்படுகின்றன.
கொரனா பரவல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றியும் குறைந்த அலுவலர்களை கொண்டும் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இதனால் இந்த முறை இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நெல்லை அரசு பொறியியல் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாசல் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை கண்காணிக்க மாவட்ட மற்றும் மாநகர காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் செல்போன் கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே கடுமையான சோதனைக்கு பின்னரே முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் தொடர்ந்து நெல்லை மாவட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது 9 மணி அளவில் முதல்கட்ட முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.