பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதும், பட்டியலில் இருந்து தங்களை வெளியேற்றிவிட வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கை -டாக்டர் கிருஷ்ணசாமி.;
திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஏழு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதும் பட்டியலில் இருந்து தங்களை வெளியேற்றிவிட வேண்டும் என்பதே தங்களது பிரதான கோரிக்கை என்று குறிப்பிட்ட அவர், தொன்றுதொட்டு வேளாண்மைத் தொழில் செய்து வரும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை அப்போதைய சூழலில் வறுமையை மட்டுமே கணக்கில் கொண்டு பட்டியல் பிரிவில் தவறுதலாக ஆங்கிலேயர்கள் சேர்த்து விட்டதாக கூறினார். இதன் காரணமாக பட்டியல் பிரிவில் இருப்பதாலேயே தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் வளர்ச்சி தடைபட்டு உள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றம் இந்த இரண்டு கோரிக்கைகளில் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்ற மசோதாவை மட்டும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றத்தின் மூலமாக மதிப்பு வாய்ப்பு என்ற இரண்டையும் இந்த மக்கள் பெறுவதாக பிரதமர் குறிப்பிட்ட நிலையில் பட்டியல் பிரிவில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் இருந்தால் பிரதமர் குறிப்பிட்ட வாய்ப்பு மற்றும் மதிப்பு இரண்டும் கிடைக்காது என்றும் பட்டியலில் இருந்து வெளியேறினால் மட்டுமே அவை தங்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
எனவே மத்திய அரசு தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவுகளோடு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான மசோதா வையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவைக்கு வரும் பிரதமர் மற்றும் விழுப்புரத்திற்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்தித்து வலியுறுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் வலியையும் வேதனையையும் தமிழகம் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எடுத்துரைத்து நாடாளுமன்றத்தில் வரும் தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறும் உறுப்பினர்களோடு பொதுத் தொகுதிகளில் வெற்றிபெறும் உறுப்பினர்களை அதிக அதிகாரத்தோடு இருப்பதாக குறிப்பிட்டார். மக்களுக்கான தேவைகளை தனித் தொகுதியில் இருந்து வெற்றி பெறும் உறுப்பினர்களால் முறையாக செய்ய முடிவதில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.